சத்தியம்

சத்தியம்

1.
சத்தியம் சத்தியம்
சத்தியம் மீது பொய்
சத்தியம் செய்தான்
சத்தியமாகவென…
2.
மழையில்லாத நள்ளிரவு
மின்னொளி வெளிச்சம்
என்ன அவசரமோ?
தனிமையில் வேகமாக
நடக்கிறான் துணிந்து
சந்தேகப் பார்வைகள்
எங்குமில்லை அந் நேரம்.
3.
பழுத்த இலைகள்
விழக் கண்டு
பச்சை இலைகள்
சிரித்தாற் போல இருக்கிறது
உன்
மெல்லிய சிரிப்பின் அழகு.
4.
இன்று வீட்டிற்கு வந்த நண்பன்
மீண்டும் பார்ப்போமென்று கூறி
விடைபெற்றான்
டீ கூட குடிக்காமல்
அவசரமாய்…
5.
நூறாண்டு முன்னாள்
நன்கொடை அளித்தவர் பெயர்
பதிக்கப்பட்டிருக்கிறது
அழியாமல் இன்னும் இருக்கிறது
அந்த மலைப் பாதைப் படிகளில்…
6.
மீண்டும் மீண்டும்
சத்தியம்
செய்துவிட்டு செய்துவிட்டு
தவறு செய்கிறான்
சத்தியம் என்பது
நேர்மையான பொய்யோ?
7.
உண்
உறங்கு
உடலுறவு கொள்
உறவு வளர்
உயிர் விடு.
8.
தரையில் ஈரம்
குறுக்கே மரக்குச்சிகள்
மாற்று பாதையில்
பயணிக்கிறது
ரயில் பூச்சி.
9.
பட்டினத்தார் கையில்
ஞானக் கரும்பு
காமாட்சி அம்மன் கையில்
காமன் கரும்பு
குழந்தையின் கையில்
இனிக்கும் கரும்பு.
10.
சில்லென்று ஊதல்காற்று
அகல்விளக்கின் சுடரொளி
அணையாமல் அசைகிறது
என் மனம் அங்கே
சாய்ந்து சாய்ந்து.
10.
நனையாமல் இருக்கும்
என்னை
வெளியில் அழைக்கிறது மழை
என் தேகம் தழுவி
சில்லிட வைக்க…

ந க துறைவன்.